திருச்சி:ஜீயபுரம் அருகே திருச்செந்துறை கிராமம் முழுவதும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என்று சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வக்ஃபு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேபோல திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பன்குளம், பெரியநாயக்கசத்திரம், சித்தாநத்தம், கொமக்குடி, மணமேடு, பாகனூர் ஆகிய 6 கிராமங்களும் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான சொத்து எனவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது பெயர்களில் உள்ள சொத்துகளை வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, திருச்செந்துறை கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) வைத்தியநாதன் தலைமையில், திருச்செந்துறை கிராம மக்களுக்கும், வக்ஃபு வாரிய அதிகாரிகளுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன் முடிவில், திருச்செந்துறை, கடியாக்குறிச்சி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் இன்று முதல் பத்திரப்பதிவு செய்ய ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நடத்தவிருந்த போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர்.
இந்நிலையில், திருச்செந்துறை சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யவந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ஊர்மக்களை சந்தித்து கிராமத்தின் இடங்கள் தொடர்பான வக்ஃபு வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பா.ஜ.க வின் மாநில மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகள், கட்சி அணிபிரிவு நிர்வாகிகள் என பலர் உடனிருந்தனர்.