தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத்தார் மறைந்ததுபோல் ஈமச்சடங்குகள்.. விஜயகாந்த் மறைவை உணர்வுப்பூர்வமாக அனுசரித்த குமரக்குடி கிராமத்தினர்!

Vijayakanth death: தம் நடிப்பால் கிராம மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த நடிகர் விஜயகாந்த்தின் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, திருச்சி குமரக்குடி கிராம மக்கள் ஒன்று கூடி உருவ பொம்மையை பாடை ஏற்றி மொட்டையடித்து வழி அனுப்பினர்.

எம்.ஜி.ஆர் மறைவை மீண்டும் கொண்டு வந்த நடிகர் விஜயகாந்த்
பாடை ஏற்றி ஈமச்சடங்குகள் செய்து மொட்டை அடித்த கிராம மக்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 3:18 PM IST

பாடை ஏற்றி ஈமச்சடங்குகள் செய்து மொட்டை அடித்த கிராம மக்கள்

திருச்சி:எளிமையான தன் குணத்தாலும், கருத்துக்கள் மிகுந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்த காரணத்தாலும் பட்டி தொட்டிகளில் இருந்த எளிய மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருந்தார் கேப்டன் விஜயகாந்த். திரையுலகில் உள்ள பல நட்சத்திரங்களுக்கு பெருமளவு உதவிகளையும் அவர் செய்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றைய முன் தினம் (டிச.28) விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை உடன் நேற்று, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: ஈரோட்டில் விஜயகாந்த் மறைவையொட்டி மொட்டை அடித்து அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்..!

இந்த நிலையில், எம்.ஜி.ஆர் மறைவை மீண்டும் கொண்டு வந்த நடிகர் விஜயகாந்தின் மறைவுக்கு, திருச்சி மாவட்ட மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நொச்சியம் அருகே உள்ள குமரக்குடி கிராம மக்கள் மொட்டையடித்து, ஈமச்சடங்குகள் செய்து அஞ்சலி செலுத்தினர்.

அக்கிராமத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி விஜயகாந்தின் உருவ பொம்மையை பாடையில் வைத்து ஊரைச் சுற்றி வந்தனர். மேலும், கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் தங்களது ஆதங்கத்தை கண்ணீராக வெளிப்படுத்தி, ஒப்பாரி வைத்து அழுதனர்.

பின், விஜயகாந்த் இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் பிரபு மொட்டையடித்து, தன் இறுதி மரியாதையை செலுத்தி வழி அனுப்பி வைத்தனர். தேமுதிக முன்னாள் மாவட்ட பிரதிநிதி KN சிவாஜி ரமணா, இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் பிரபு, பூந்தோட்ட காவல்காரன் ரசிகர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஏற்பாட்டில், இந்த கண்ணீர் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதையும் படிங்க: "உழைப்பால் உயர்ந்த தலைவனுக்கு வீரவணக்கம்" - வேல்முருகன் நேரில் அஞ்சலி!

ABOUT THE AUTHOR

...view details