திருச்சி:வியட்ஜெட் நிறுவனத்தின் வர்த்தக துணைத் தலைவர் லிங்கேஸ்வரா இன்று (செப்.27) திருச்சி சங்கம் ஹோட்டலில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வியட்நாம் நாட்டின் முன்னணி விமான நிறுவனமாக திகழும் வியட்ஜெட் விமான நிறுவனம், இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் வருகிற நவம்பர் 2ஆம் தேதி முதல் திருச்சியில் இருந்து வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் சிட்டி (Ho Chi Minh City) இடையே வாரத்திற்கு 3 விமானங்களையும், ஹோ சி மின் சிட்டியில் இருந்து திருச்சி இடையே வாரத்திற்கு 3 விமானங்களையும் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் திருச்சியில் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு, ஹோ சி மின் சிட்டிக்கு உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு சென்றடைகிறது. அதேபோல் அங்கிருந்து ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு வந்தடைகிறது.
தமிழ்நாட்டிலிருந்து வியட்நாமுக்கு நேரடிப் போக்குவரத்து என்பது திருச்சி விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும், இரு நாடுகளின் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய விடயமாக அமையும். இது வியட்நாம் மற்றும் இந்தியா இடையே சுற்றுலா, பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொச்சியில் இருந்து ஹோ சி மின் நகரத்திற்குச் செல்லும் விமான சேவையுடன், இந்த புதிய சேவையை நாங்கள் தொடங்குவதன் மூலம், இந்தியாவின் தென்பகுதியை வியட்நாம் நகரங்களுடன் இணைப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவையை வழங்குவதன் மூலம், இரு நாட்டு மக்களிடையிலான பயணம் மற்றும் வர்த்தகம் நல்ல வளர்ச்சி அடையும் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்தார்.
வியட்நாம் தேசிய சுற்றுலா ஆணையத்தின் அறிக்கையின்படி, நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் வியட்நாமிற்குச் சென்ற இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை, தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தைவிட 200 விழுக்காடு அதிகரித்து இருப்பதாகவும், வியட்நாமிற்கு சுற்றுலா செல்லும் நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியாவும் இடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.