நடைப்பயிற்சி சென்ற பேராசிரியையை அடித்து ரோட்டில் இழுத்துச் சென்ற கொள்ளையன் திருச்சி நகரின், மத்தியப் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வஉசி சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி சீதாலட்சுமி (53). இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகவும், இசிஇ துறைத்தலைவியாகவும் பணிபுரிகிறார்.
கடந்த, 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை பேராசிரியை சீதாலட்சுமி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி சென்றிருக்கிறார்.
இவர் தனியாக நடைப்பயிற்சி செல்வதை கண்காணித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவரைப் பின் தொடர்ந்து வந்து உருட்டுக் கட்டையால் தலையின் பின்புறத்தில் தாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, மயங்கி விழுந்த சீதாலட்சுமியை தரதரவென இழுத்து ஓரமாக போட்டுவிட்டு, அவரது இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போனை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
இதுகுறித்து சீதாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர், தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பழமனேரியை சேர்ந்த செந்தில் குமார் (32) என்பதும், குடிபோதை மற்றும் கஞ்சாவுக்கு அடிமையான செந்தில் குமார், தற்போது தாராநல்லூர் கீரைக்கடை பஜாரில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது.
அதையடுத்து அவரை போலீசார் பிடிக்க முயன்றபோது, திருடிய இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று தடுப்புக் கட்டையில் மோதி கீழே விழுந்தார். இதில் அவரது கால் உடைந்தது. உடனடியாக அவரை மீட்ட போலீசார், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், இது குறித்து செந்தில் குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடம் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட பேராசிரியையை செந்தில் குமார் தாக்கி, தரதரவென்று சாலையில் இழுத்துச் செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இவ்விவகாரம் குறித்து, தனது ட்விட்டர் பதிவில் அரசுக்கு எதிராக கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவுசெய்த ட்வீட்டில், 'திருச்சியில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணை தாக்கி, நடுரோட்டில் தரதரவென இழுத்துச்சென்று, பட்டப்பகலில் வழிப்பறி செய்திருப்பது நெஞ்சை பதற வைக்கிறது; யார்க்கும்-எதற்கும் அஞ்சோம் எனும் மனநிலையில் தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது.
ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்தது போல் தமிழ்நாட்டில் எது நடந்தாலும், சட்டம் ஒழுங்கு அடியோடு அழிந்து போனாலும், விளம்பர அரசியல் செய்யும் விடியா அரசின் முதல்வரின் காதுகளுக்கு மட்டும் அது எட்டுவதே இல்லை என்பது வேதனைக்குரியது’ என கடுமையாக சாடியுள்ளார்.
இதையும் படிங்க: திருச்சி சிவா கார் மீது தாக்குதல்.. திமுகவில் இருந்து 4 பேர் தற்காலிக நீக்கம்..