திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வகித்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இதில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து வீரமணி செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறினார்.
அப்போது அவர் பேசுகையில், ”மணியம்மையார் நூற்றாண்டு விழாவை மார்ச் 10ஆம் தேதி சென்னையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை நிரந்தரமாக நீக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் ஒரு முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். திராவிடர் கழகம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 11 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதை வரவேற்கிறோம்.
இந்த நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் மார்ச் 23ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டம் மூலம் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க அழுத்தம் கொடுக்கப்படும். இந்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். உயர் சாதியினரின் பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கு 10% இட ஒதுக்கீடு எனும் அரசமைப்புச் சட்டம் மோசடி திட்டமாகும். அதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன” என்றார்.