திருச்சியில் இன்று தேசம் காப்போம் பேரணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்த விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டால் எட்டு கோடி பேர் நாடற்றவர்களாக மாறும் நிலை உருவாகும்.
26 ஆயிரத்து 658 தடுப்பு முகாம்கள் கட்ட இருக்கிறார்கள். இதற்கு 12 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். இது இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும். மத்திய, மாநில அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையென்றால் நாடு இருள்மயமாகிவிடும். இந்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டும்தான் பாதிக்கப்படுவார்கள், பட்டியலின மக்கள் மட்டும்தான் பாத்திப்புக்குள்ளாவார்கள் என்று கருதினால் அது அறியாமை.
அவ்வாறு நம்பினால் அது மிகப்பெரிய மூட நம்பிக்கை. என்.ஆர்.சி. குறித்து பிரதமரும், உள் துறை அமைச்சரும் மாறுபட்ட கருத்துகளைக் கூறி நாடகமாடுகின்றனர். பொருளாதார வீழ்ச்சியைச் சரிசெய்யாமல் மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து அரசியலமைப்புச் சட்டத்தைச் சிதைக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்து அதைச் சிதைப்பது சங்பரிவார்களின் நீண்ட நாள் கனவாகும்.