திருச்சி: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
கடந்த 22ஆம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கிய பகல் பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் நிகழ்வில் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பிரகாரங்களில் வீதி உலா வரும் நம்பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சேவித்து வழிபாடு செய்வர்.
வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து விழாவின், 5ஆம் திருநாளான இன்று (டிச. 27) சுக்கிரனுக்கு அதிபதியான நம்பெருமாள் (உற்சவர்) மூலஸ்தானத்திலிருந்து "திருமாலை" முதல் பாசுரம், "திருப்பள்ளியெழுச்சி" பாசுரத்திற்கேற்ப ரத்தின பாண்டியன் கொண்டையணிந்து, மார்பில் விமானப் பதக்கம் மற்றும் வைர அபயஹஸ்தம், நெல்லிக்காய்மாலை, மகரஹண்டி, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட ஆபரணங்களை சாற்றிக்கொண்டு மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளினார்.