ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருச்சி:ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, பகல் பத்து உற்சவத்தின் முதல் திருநாளான இன்று (டிச.13) மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு, அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெறும் விழாக்களில் சிறப்பானது மற்றும் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி பெருவிழாவாகும். இந்த வைகுண்ட ஏகாதசி விழா, நேற்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது, டிச.12 முதல் 22 வரை பகல் பத்து திருவிழாவாகவும், 23 முதல் ஜனவரி 2 வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசியின் பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று, மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் நம்பெருமான் பாண்டியன் கொண்டை, கஸ்தூரி திலகம், நவரத்தின கர்ண பத்திரம், முத்துமாலை, பவள மாலை, வைர அபயஹஸ்தம், அடுக்கு ஆரம், புஜ கீர்த்தி, வைர பதக்கம் அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பாடு வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு, அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பகல் பத்து உற்சவம்: பகல்பத்து வைபவத்தின் 10ஆம் நாள், வரும் டிசம்பர் 22ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளிப்பார். பின்னர், இராப்பத்து வைபவத்தின் முதல் நாளான்று அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் திறப்பு எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 29 அன்று கைத்தல சேவையும், டிசம்பர் 30ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி வைபவமும் நடைபெறும். இதில் நம்பெருமாள் தங்கக் குதிரையில் வலம் வருவார். ஜனவரி 1ஆம் தேதி, நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளுவார். 2ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைகிறது.
வைகுண்ட ஏகாதசி சிறப்பு ஏற்பாடுகள்: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிவதால், அதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். மேலும், பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஸ்ரீ ரங்கத்திற்கு கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:“உங்களை சிறப்புத் திறனாளிகள் என்றே அழைப்பேன்” - புதுச்சேரியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் ஆளுநர் தமிழிசை பேச்சு!