திருச்சி: திருப்புமுனை ஆரம்பமாகிறது மறுமலர்ச்சியில் தொண்டர்கள் இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள், 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி வைகோவை கட்சியிலிருந்து நீக்குவதாகத் திமுக செயற்குழு முடிவெடுத்தது.
அடுத்த நாளே, "நாங்கள்தான் உண்மையான திமுக. கறுப்பு சிவப்புக் கொடியும், உதயசூரியன் சின்னமும், அண்ணா அறிவாலயமும் எங்களுக்கே சொந்தம்" என்று உரிமை கொண்டாடினார் வைகோ. அவருக்கு தற்பொழுது 78 வயதாகிறது. இருப்பினும், அவருக்கு இயக்கத்தை புத்துயிரோடு வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இப்போது.
மீண்டும் வரலாறு திரும்பப் போகிறது. "நாங்கள்தான் உண்மையான மதிமுக. சிவப்பு கறுப்பு சிவப்பு கொடியும், தாயகமும் எங்களுக்கே சொந்தம்" என்று உரிமை கொண்டாடக் காத்திருக்கிறார்கள் மதிமுகவின் மூத்த நிர்வாகிகள். சிலர் அதுவும் கொங்கு மண்டலத்தில் இருந்து இப்படி கொம்பு சீவி விட்டதால் ஒரு குரல் ஓங்கி ஒலிக்கப்போகிறது என்கிறார்கள்.
என்ன பிரச்னை?
தமிழ்நாடு வரலாற்றிலேயே, கட்சியில் இருப்பவர்களைவிட விலகியவர்களே அதிகம் என்ற தனிப்பெருமை கொண்ட இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். அதில் சிலரை மட்டும்தான் திமுக இழுத்தது. மற்றவர்கள் எல்லாம் வைகோவின் போர்ப்படை தளபதிகளாக இன்றுவரை அவருடனேயே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். வைகோவின் கட்டுக்கடங்காத கோபம் ஊரறிந்த ரகசியம், அத்தோடு தவறான முடிவுகளாலும் சிலரை வழியனுப்பிவைத்தார் என்பதே வரலாறு.
இன்றைய பிரச்னைக்குக் காரணம், துரை வைகோவின் கையில் கட்சியைக் கொடுக்கும் அவரது முடிவு. கருணாநிதியின் வாரிசு அரசியலை எதிர்த்துக் கட்சியைவிட்டே வெளியேறியவர், இன்று அதே தவறை செய்கிறபோது எப்படிச் சகித்துக்கொள்ள முடியும் என்று கேட்கிறார்கள், மூத்த மதிமுக நிர்வாகிகள். குறிப்பாக கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, சட்டத்துறை செயலாளர் தேவதாஸ், ஆட்சி மன்றக்குழு செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் போன்ற இன்னும் சிலர்.
அதேபோல், அரசியல் ஆலோசனை குழு செயலாளர் புலவர் செவ்வந்தியப்பன், கொள்கை பரப்புச் செயலாளர் அழகு சுந்தரம், முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை மருத்துவர் சந்திரசேகரன், ஒரே அணியாகச் செயல்படுகிறார்கள் என்கிறார்கள். இவர்கள் எடுக்கிற முடிவைத்தான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வைத்து, அவர்களின் ஒப்புதலுடன் தீர்மானமாக நிறைவேற்ற முடியும் என்று மதிமுகவின் சட்டதிட்ட விதி சொல்கிறது. ஆனால், துரை வைகோ நியமனம் தொடர்பாக இவர்களிடம் வைகோ முன்கூட்டியே கருத்துக் கேட்கவும் இல்லை என்கிறார்கள்.