திருச்சி:திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய விமான முனையம் கட்ட இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் ரூ. 951 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கி துரிதமான முறையில் பணிகள் நடைபெற்று வந்தது.
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் போன்ற பகுதிகளுக்கும் தினசரி விமானச் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, ரூ.951 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், கூடுதல் செலவினமாக ரூ.249 கோடி என மொத்தம் ரூபாய் 1200 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப்பணிகள் நிறைவு பெற்று, புதிய முனையம் விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த புதிய முனை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்ற தகவல் வெளியாகியது. ஆனால், அதிகாரப்பூர்வமாகத் தகவல் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், பிரதமர் புதிய விமான முனையம் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.