திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 23ஆவது வார்டுக்கு உட்பட்ட காசிம் ராவுத்தர் பேட்டை, அப்பாஸ் பேட்டை, சிதம்பரத்தான் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக நகராட்சி விநியோகிக்கும் குடிநீரில் கழிவுநீர் கலந்துவருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கைகளும் இல்லை.
இந்நிலையில், நேற்றும் அப்பகுதியில் விநியோகிக்கப்பட்ட காவிரி குடிநீரில் கழிவு நீரும், கழிவுநீர் புழுக்களும், சாக்கடைக் கழிவுகளும் கலந்துவந்துள்ளது.
நேற்று விநியோகிக்கப்பட்ட காவிரி குடிநீரில் கழிவு நீரும், கழிவுநீர் புழுக்களும், சாக்கடை கழிவுகளும் கலந்து வந்துள்ளது இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, சாக்கடை கலந்த குடிநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. பலமுறை நகராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு புகார் அளித்தும் எந்தப் பலனும் இல்லை. நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியப் போக்கினைக் கடைபிடித்துவருகிறது.
இந்தக் குடிநீரை வடிகட்டி கொதிக்க வைத்து பருகினாலும் கூட துர்நாற்றம் குறைவதில்லை. நல்ல குடிநீருக்காக ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்று ஒரு குடம் 20 ரூபாய்க்கு வாங்கி வரும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, மாவட்ட நிர்வாகம் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.