திருச்சி: மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தஞ்சை, கும்பகோணம் பகுதிகளிலுள்ள கோயில்களில் வழிபாடு செய்வதற்காக விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அப்போது செய்தியாளரைச் சந்தித்த அவர், “உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மக்களை மீட்பதற்கு நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.
உக்ரைனில் விமான நிலையங்கள் மூடப்பட்டதால் அவர்களை சாலை மார்க்கமாக அருகிலுள்ள ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளுக்கு அழைத்துச்சென்று அங்கிருந்து மீட்பதற்கான நடவடிக்கை எடுத்துவருகிறோம். இது தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் அதனைச் சுற்றியுள்ள நாட்டு அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு வருகிறோம்.
ருமேனியாவில் எல்லைப் பகுதியில் இந்தியர்கள் அவர்களது கடவுச்சீட்டை காண்பித்தால் உள்ளே விடுவதற்கு ஏற்பாடுசெய்துள்ளோம். ருமேனியாவிலிருந்து வெளிவருவதற்குப் பல்வேறு விமானங்கள் தயாராக உள்ளன. அங்கிருந்து டெல்லி அழைத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு எவ்வித கட்டணமின்றி அவர்களை இலவசமாக அழைத்துவரவே ஏற்பாடு செய்துவருகிறது. விமான சேவையே தற்சமயம் இல்லை என்று கூறுகிறார்கள். அப்படி இருக்க எப்படி டிக்கெட் ஒரு லட்சம் ரூபாய் என்று அங்குள்ள மாணவர்கள் கூறுவார்கள். இந்திய தூதரகத்திலிருந்து நன்கு அனுபவம் வாய்ந்த அலுவலர்களை இந்தப் பிரச்சினை குறித்து பேசுவதற்கு அனுப்பிவைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தற்சமயம்தான் கரோனாவிலிருந்து விடுபட்டுவந்துள்ளோம். முழுவதுமாக விடுபட்ட பிறகு சமூக வலைதளங்கள் மூலமாகச் சுற்றுலாத் துறை குறித்து பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. துபாயில் இந்தியாவின் சுற்றுலாத் துறை குறித்த கண்காட்சி ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தரமாக அமைக்கவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
செய்தியாளரைச் சந்தித்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பன்னாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கிய பிறகு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. உள்நாட்டு சுற்றுலா வளத்தையும், பயணிகள் எண்ணிக்கையும் பெருக்க நடவடிக்கையும் எடுத்துவருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க:தீவிரமடையும் போர்... உக்ரைனில் செய்வதறியாது தவிக்கும் தமிழ் மாணவர்கள்!