திருச்சியில் உள்ள உய்யக்கொண்டான் கால்வாய் ராஜராஜ சோழன் காலத்தில் உருவாக்கப்பட்டது. சுமார் 87 கிலோமீட்டர் தூரம் வரை ஓடும் இந்தக் கால்வாயில் காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன்மூலம் 33 ஆயிரம் ஏக்கர் பாசனம் நடைபெற்றுவருகிறது.
நகர்ப்புறத்தில் இந்தக் கால்வாய் தனது முந்தைய நிலையிலிருந்து மாறிவிட்டது. தற்போது இந்த உய்யக்கொண்டான் கால்வாயில் கழிவுநீர் கலந்து முற்றிலும் மாசடைந்து காணப்படுகிறது.
எனவே, இந்தக் கால்வாயை மீட்டெடுக்கும் முனைப்பில் 'சிட்டிசன் ஃபார் உய்யக்கொண்டான்' என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டுவருகிறது. திருச்சியில் உள்ள இயற்கை செயற்பாட்டாளர்கள் குழுவாக இந்த அமைப்பில் இணைந்து செயல்பட்டுவருகின்றனர். இந்நிலையில், உய்யக்கொண்டான் கால்வாய் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் திருச்சி சிட்டிசன் ஃபார் உய்யக்கொண்டான் அமைப்பு சார்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது.
திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற இந்த ஓவியப் போட்டியில் 350 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 4, 5, 6ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு 'நீர் மாசு அடைவதற்கான காரணங்கள்' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. 7, 8, 9ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 'நகரில் ஒரு கால்வாயின் அழகு' என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே பரிசு வழங்கப்பட்டது.
மாணவ மாணவிகளுக்கு ஓவியப் போட்டி இது குறித்து அமைப்பின் உறுப்பினர் டாக்டர் நரசிம்மராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களது அமைப்பு சார்பில் கால்வாயை சுத்தம் செய்யும் பணிகள், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவருகிறோம். மூன்று பிரிவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கால்வாய் குறித்து குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அது ஒரு குடும்பத்திற்கே விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்குச் சமமாகும்" என்றார்.