திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மேட்டுக்கடையில் அரசு மதுபானக் கடை இயங்கிவருகிறது. இதில் மேற்பார்வையாளர், விற்பனையாளர் என ஒரு நாளைக்கு இரண்டு பேர் வீதம் மொத்தம் நான்கு பேர் பணியாற்றி வருகின்றனர். கடைக்கு இரவு நேர காவலாளியாக அதே ஊரைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஆக.14) இரவு வழக்கம்போல் பணிக்குச் சென்ற காவலாளி சுப்ரமணி, இரவு கடைக்குச் சென்று பார்த்தபோது, கடையின் வெளிக்கதவு பூட்டியும், உள் கதவு பூட்டாமலும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து மேற்பார்வையாளர் தங்கவேலுவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் கடையின் விற்பனையாளர்களுடன் கடைக்குச் சென்று பார்த்தபோது, மதுபானக் கடையிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மணப்பாறை காவல் துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.