திருச்சி - உறையூர் ராமலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாதன். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் திருச்சி நிருபராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் எம்.எல்.எம் நிறுவனம் நடத்திய கூட்டத்தை தஞ்சை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மோசடி குறித்து செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தன. இதேபோல் இந்த தனியார் டிவி நிருபர் சபரிநாதன் இந்த நிறுவனத்தின் மோசடி குறித்தும், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளையும் அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், திருச்சி மெயின்கார்டுகேட் அருணாசலம் மன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் செய்தி சேகரித்து விட்டு சபரிநாதன் மீண்டும் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திருச்சி - தில்லை நகர், 4ஆவது குறுக்குத்தெரு, அருகே டூவீலரில் வந்து கொண்டிருந்த சபரிநாதனை பின்னால் மற்றொரு அதிவேக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கையில் வைத்திருந்த கட்டையால், அவரின் தலையில் பலமாக அடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.