திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது தம்பி ஆறுமுகம். அதே பகுதியைச் சேர்ந்த துரைராஜ், மதுபாலன், கனகராஜ் ஆகியோரது குடும்பத்தாருக்கும் திருப்பதி குடும்பத்தாருக்குமிடையே நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், 2015ஆம் ஆண்டு மே 27ஆம் தேதியில் ஏற்பட்ட நிலப் பிரச்னையின்போது இரு குடும்பத்தாருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
சகோதரர்களை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள்!
திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே அண்ணன், தம்பி கொலை வழக்கில் மூன்று பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதில் துரைராஜ், மதுபாலன், கனகராஜ், ஆகிய மூவரும் சேர்ந்து திருப்பதி மற்றும் ஆறுமுகத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இந்தக் கொலை சம்பவம் திருச்சி மாநகரத்தையே உலுக்கியது. இதனையடுத்து சிறுகனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தக் கொலை வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி செல்வம் இவ்வழக்கை விசாரித்து வந்தார்.
இந்த இரட்டைக் கொலை வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், இதில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி செல்வம் தீர்ப்பளித்தார். நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து மூன்று பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.