ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேவுள்ள கருத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் சொந்தமாக 80 செம்மறி ஆடுகளை வளர்த்துவருகிறார்.
தீபாவளியை முன்னிட்டு வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை செய்வதற்காக முடிவு செய்திருந்தார். பெரிய ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் வேளையில் சின்னஞ்சிறிய ஆடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று (நவ.04) 21 சிறிய செம்மறி ஆடுகளை கொட்டகையில் அடைத்து வைத்த அவர், இன்று (நவ.05) காலை கொட்டகையை திறந்து பார்த்த போது மின்னல் தாக்கியதில், ஆடுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு 21 ஆடுகளும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
ஆடுகள் உயிரிழந்தது குறித்து காவல் துறைக்கும், கால்நடை மருத்துவமனைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த ஆடுகளை உடற்கூராய்வு செய்தனர். உயிரிழந்த 21 ஆடுகளின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.