எம்.பி., சீட்டுக்கு காய் நகர்த்தும் கமல் - டிடிவி தினகரன் சாடல் திருச்சி:அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நடத்திய பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றி தீர்ப்பு கூறவில்லை எனத் தெரிவித்துள்ளார். எனவே, இந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுதாக தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னம், எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டால் அந்த சின்னம் இன்னும் பலவீனமாகும் என்று சாடினார். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஓபிஎஸுக்கு தற்காலிக பின்னடைவாக தான் இருக்கும் என்றும், தேர்தல் ஆணையத்தில் இது குறித்து மேல்முறையீடு செய்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சிவில் வழக்கிற்கும் இந்த தீர்ப்பிற்கும் சம்பந்தமும் என்றும் இந்த விவகாரத்தில் முதல் சுற்றில் ஓபிஎஸ் வெற்றி பெற்றதையும் சுட்டிக்காட்டினார்.
இரண்டு, மூன்று சுற்றுகளுக்குப் பின் எடப்பாடிக்கு வெற்றி கிடைத்ததாகவும், இது ஒரு தொடர் போராட்டம் என்றார். இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி தரப்புக்கு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூடுதலாக 5000 ஓட்டுக்கள் வரை கிடைக்கலாம் என்றும் வெற்றி வாய்ப்பை கொடுக்கும் அளவிற்கு ஒன்றும் நடந்துவிடவில்லை என்றும் இதுதான் அங்குள்ள நிலவரம் என்றும் கூறினார்.
கடந்த 2017 ஏப்ரலில் இருந்து தான், அதிமுகவை டெல்லி இயக்குகிறது எனக் கூறிய அவர், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அணியில் அமமுக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் கூத்துகளை பார்க்கும் போது, இடைத்தேர்தலை தள்ளிப்போட வேண்டும் எனக் கூறினார். சீமான் ஒரு சமூகத்தை பற்றி பேசியதாக அவர் மீது தொடரப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால் அவர் ஜாக்கிரதையாக தான் பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆளுநராக இருப்பவர் சனாதன தர்மம் பற்றியெல்லாம் பேச வேண்டியதில்லை என்றும் இருப்பினும் அரசியலமைப்பு சட்டப்படி பதவியிலிருப்பவரை மதிக்க வேண்டும் என்பது தவிர்க்க இயலாதது என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக, ஐந்து ஆண்டுகளுக்குப் பின் எடுக்க வேண்டிய கெட்டப்பெயரை இரண்டு ஆண்டுகளில் எடுத்துள்ளதாகவும் விமர்சித்தார்.
நடிகர் கமல்ஹாசனை பொறுத்தவரை, தகுதியான அரசியல்வாதி ஆகிவிட்டார் என்றும் அவர் திமுகவை திருப்திப்படுத்த இப்போது பேசிக் கொண்டிருப்பதாகவும் விமர்சனம் செய்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் சீட்டு வாங்குவதற்காக, 'நான் பெரியார்.. காந்தியின் பேரன்' என்றெல்லாம் அவர் பேசுவார் என்றும் எனவே, அவர் பேச்சை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு, ஒதுக்கி வைத்து விடலாம் என்றும் சாடினார்.
இதையும் படிங்க: "எந்த கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது" - மதுரையில் ஈபிஎஸ் மகிழ்ச்சி பொங்க பேச்சு