தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபாகரன் வெளியில் வருவதற்கான சூழல் உருவாகி இருக்கிறது - திருச்சி வேலுச்சாமி பிரத்யேகப்பேட்டி!

பிரபாகரன் இறப்பு செய்திக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய நாடகம் உள்ளது என்றும், பிரபாகரன் வருவதற்கான சூழ்நிலை தற்போது உருவாகி இருக்கிறது என்றும் திருச்சி வேலுச்சாமி கூறியுள்ளார்.

By

Published : Feb 22, 2023, 11:35 AM IST

பிரபாகரன் வருவதற்கான சூழல் உருவாகி இருக்கிறது - திருச்சி வேலுச்சாமி
பிரபாகரன் வருவதற்கான சூழல் உருவாகி இருக்கிறது - திருச்சி வேலுச்சாமி

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் நிலை பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி அளித்த பிரத்யேக பேட்டி

திருச்சி: கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து விடுதலைப் புலிகள் அமைப்பை பல்வேறு நாடுகள் தடை செய்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், அவரது குடும்பத்தினரும் நலமுடன் இருப்பதாக பழ.நெடுமாறன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர், பிரபாகரனின் குடும்பத்தினர் தன்னிடம் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள் எனவும் கூறினார்.

இதற்கு இலங்கை ராணுவம் மறுப்புத் தெரிவித்தது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி 'ஈடிவி பாரத் தமிழ்நாடு' ஊடகத்திற்கு பிரத்யேகப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

கேள்வி 1: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா?நான் இன்றைக்கு சொல்லவில்லை. எப்போது அவர் இறந்தார் என அவரது உடல் ஊடகங்களில் வெளியானதோ, எவருக்கும் எதுவும் தெரியாமல் இருக்கும்போது இது அவரது உடல் அல்ல என்றும், யாரோ ஒருவரது போலியான உடலை வைத்துக் கொண்டு பிரபாகரன் என்று இலங்கை அரசும், இலங்கை ராணுவமும் சொல்வதில் ஏதோ ஒரு சூது உள்ளது என்றும் தெரிவித்தேன். அதற்குப் பின்னணியில் ஒரு மிகப்பெரிய நாடகம் உள்ளது என்றும் முதன்முதலாக சொன்னதே நான்தான். அதனால் எனக்கு இது புதிதல்ல.

கேள்வி 2: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா இருப்பதாக நம்புகிறீர்களா?அதெல்லாம் வேறு விஷயம். அவர்களது குடும்பப் பிரச்னை குறித்து பேச விரும்பவில்லை. பிரபாகரன் குறித்து பேசலாம். அவரைப் பற்றி விமர்சனம் செய்யலாம். அவர்களது குடும்ப உறுப்பினர்களைப் பற்றி பேசுவது நாகரிகமல்ல.

கேள்வி 3: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், ருத்ரகுமாரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைக்கான போராட்டம், ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு அமைதி வழியில் பயணிக்கிறது. இந்த நிலையில், பிரபாகரன் வந்தால் என்ன ஆகும்?

மற்றவர்கள் பிரச்னை குறித்து நாம் யோசிக்கிறோம். தன்னுடைய வாழ்க்கையை அந்தப் போராட்டத்திற்காக ஒப்படைத்துக்கொண்டு, இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், இந்த உலக வரலாற்றில் ஒரு போராளி இயக்கம் என்ற ஒன்றை 30 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை தாங்கி நடத்தியது மட்டும் அல்லாமல், உலகத்தில் எந்த நாட்டிலும் எவரும் செய்யாத அளவிற்கு 3 படைகளை வைத்து, அதை நிர்வகித்து, ஒரு தனி ராஜ்ஜியத்தை ஐ.நா மற்றும் உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் ஒரு நாட்டை தலைமை தாங்கி நடத்திய பிரபாகரனுக்கு என்ன செய்ய வேண்டும் என நாம் எல்லோரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனவே, என்ன செய்ய வேண்டும் என பிரபாகரனே முடிவு எடுத்துக் கொள்வார்.

கேள்வி 4: சில தமிழீழ ஆதவாளர்கள் கூறுவதுபோல, பிரபாகரன் வெளிவருவதற்கான தேவை இப்போது இல்லை என்பதை எப்படி கருதுகிறீர்கள்?அது அவர்களுடைய விருப்பமாக இருக்கலாம். நீங்கள் ஒன்று விரும்பலாம், நான் ஒன்று விரும்பலாம் என்பது வேறு விஷயம். பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இருக்கிறார். அவர் வருவதற்கான சூழ்நிலை இருக்கிறதா என்று பார்த்தால், அவர் வருவதற்கான சூழ்நிலை இப்போது உருவாகி இருக்கிறது.

பிரபாகரன் வருவதும், வராமல் இருப்பதும் அவர் எடுக்க வேண்டிய முடிவு. இந்த கேள்விகளுக்கெல்லாம் பின்னணி என்று பார்த்தால் அவர் இறந்திருப்பாரா என்றெல்லாம் பேசுவது வரலாறு தெரியாதவர்கள் பேசும் பேச்சு. உலக வரலாற்றில் கொரிலா மற்றும் வியட்நாம் போரில் மிகப்பெரிய தளபதியாக இருந்தவர், ஹோசிமின். அவர் மறைந்து இருந்துதான் தாக்கினார். ஆகவே, மறைந்திருப்பது வீரர்களுக்கு அஞ்சுவதும் அஞ்சாமை பேதமை என்பதுபோல, சாதகமான சூழ்நிலைக்காக காத்திருந்து தாக்குவது என்பது வரலாற்றில் உண்டு.

இந்திய வரலாற்றில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவை விட்டு தப்பி ஓடி தலைமறைவாக பல ஆண்டுகள் இருந்து, அதற்கு பின்னாலே ஒரு பெரும் படையை நிறுவி அந்தப் படை மூலமாக நாட்டை தாக்கியதும், துரதிர்ஷ்டவசமாக இந்தியா சுதந்திரம் அடையும்போது அவர் இல்லாவிட்டாலும், சுதந்திரம் வாங்குவதற்கு 3 ஆண்டுகள் முன்பாகவே இந்தியாவின் ஒரு பகுதியாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளைக் கைப்பற்றி அங்குள்ள வெள்ளையர்களை வெளியேற்றி, அங்கே இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்த வரலாறு உண்டு. ஆகவே, பிரபாகரன் போன்று மகத்தான வீரர் சரியான தருணத்திற்கு காத்திருப்பது என்பது இயற்கையான ஒன்று.

இதையும் படிங்க:"பிரபாகரன் உயிருடன் இல்லை, எங்களிடம் டிஎன்ஏ ஆதாரம் உள்ளது" - இலங்கை ராணுவம்

ABOUT THE AUTHOR

...view details