தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பாலமுருகன் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த ஜூலை மாதம் 54 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இந்த அறிவிக்கை பல்கலைக்கழக நடைமுறைப்படியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாமலும் வெளியிடப்பட்டுள்ளது. துணைவேந்தர் தன்னிச்சையாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிக்கை மூலம் இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிக்கக்கூடிய ஒரு செயல் நடந்துள்ளது. நேர்காணலில் விண்ணப்பதாரரின் நியமன தகுதி முழுமையாகக் கண்டறியப்போவதாகவும் அவர்களின் கல்வித்தகுதி, பணி அனுபவம், கல்வி சாதனை ஆகியவற்றை முதுநிலைப் பட்டியல் தயாரிப்பதற்கு மட்டுமே கணக்கில் கொள்ளப்போவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் எந்தவித வெளிப்படைத் தன்மை இல்லாத ஊழல் செயல்பாட்டுக்கு வழிவகுக்கக் கூடியதாகும். அதனால் உடனடியாக தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்.