திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே ராக்கின்ஸ் சாலைப் பகுதியில் அதிகமாக செல்போன் பழுதுநீக்கும், உதிரிபாகங்கள் விற்பனைசெய்யும் கடைகள் இயங்கிவருகின்றன. இந்நிலையில் ஆபாச படங்களை இணையதளத்திலிருந்து பலருக்கும் கட்டண அடிப்படையில் பதிவிறக்கம் செய்துதருவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுலோச்சனா தலைமையில் காவல் துறையினர் ஆய்வுசெய்தனர்.
அங்கு ஒரு செல்போன் கடை ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்து கொடுத்ததற்கான தகவல்கள் சிக்கின. அந்தக் கடையில் வேலைசெய்த திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த காதர் பாஷா (21) என்பவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் தவறுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து காதர் பாட்ஷாவை கைதுசெய்தனர். மேலும் இந்தக் கடையில் பணியாற்றிய முகமது அஸ்ரஃப் என்பவரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.