திருச்சி:படைப்பு கடவுளான பிரம்மா, சிறிது நேர மனசஞ்சலத்தால் கடும் சாபத்திற்குள்ளாகி அவதிப்பட்டார் என வரலாறு கூறுகிறது. அதனால், இவர் சாபநிவர்த்தி வேண்டி சிவனை வேண்டினார். உரிய காலம் வரும்போது திருவானைக்காவலில் சாபவிமோசனம் தருவதாக இறைவன் கூறியதையடுத்து, பிரம்மா திருவானைக்காவலில் ஒரு குளம் ஏற்படுத்தி அக்குளக்கரையில் தங்கி கடும் தவமியற்றி வந்தார். இக்குளம் இன்றும் 4ஆம் பிரகாரத்தில் உள்ளது. அதற்கு பெயர் பிரம்மதீர்த்த குளம் ஆகும். இவரது தவத்தால் மகிழ்ந்த சிவன், சாபவிமோசனம் அளிப்பதற்காக கைலாயத்திலிருந்து புறப்பட்டபோது, பார்வதி தேவி தானும் வருவதாகக்கூறவே, இருவரும் சேர்ந்து திருவானைக்காவலுக்கு வந்தனர்.
ஏற்கனவே பெண்ணாசையினால்தான் பிரம்மனுக்கு சாபம் கிட்டியது, எனவே தற்போது பெண்ணாகிய நீ வரவேண்டாம் என்று சிவன் கூறினார். அதற்கு தேவி மறுத்து அப்படி ஏதும் நடக்காது. எனினும் பாதுகாப்பிற்காக நான் ஆண்போல் வேடமிட்டு வருகிறேன், நீங்கள் பெண்போல் வாருங்கள் என்று பார்வதி கூறியதாக கூறப்படுகிறது. இந்த யோசனைப்படி பிரம்மனுக்கு சாபவிமோசனமளிக்க சிவன், பார்வதி இருவரும் மாறுவேடத்தில், அதாவது சிவன் பார்வதியாகவும், பார்வதி சிவனாகவும் வேடமணிந்து வந்தனராம்.
சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி:ஏற்கனவே தனது செயலால் மனக்கவலையிலிருந்த பிரம்மன் சிவன், பார்வதி இவ்வாறு வந்தது குறித்து மிகவும் வருந்தி இருவரையும் தொழுதுள்ளார். இதையடுத்து சிவனும், பார்வதியும் பிரம்மனுக்கு சாபவிமோசனம் அளித்தனர். இந்த புராண சம்பவத்தை சித்தரிக்கும் வகையில் பஞ்சப்பிரகார விழா நிகழ்ச்சிகள் இக்கோயிலில் நடக்கின்றன.
பஞ்சப்பிரகார விழா புறப்பாட்டின்போது உற்சவ மூர்த்திகள் தங்களது பரிவாரங்களுடன் மேளதாளம் போன்ற ஆரவாரங்களின்றி, நான்கு வேதங்கள், திருமுறைகள் மற்றும் பஞ்சாட்சர ஜபம் ஆகியவற்றை மட்டும் அமைதியாகக் கேட்டுக்கொண்டு நான்கு பிரகாரங்களில் வலம் வருவார்கள், இதற்கு மவுனோத்சவம் என்று பெயர்.
தெற்கு நான்காம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் பிரம்மனுக்கு சாபவிமோசனம் அளித்தபின் வானவேடிக்கைகள் முழங்க, மேளதாளத்துடன், நாதஸ்வர இன்னிசை உடன் வர பஞ்சமூர்த்திகள் தங்களின் மீதி பிரகார உலாவைத் தொடருவார்கள். புராண முக்கியத்துவம் வாய்ந்த இச்சம்பவமே இக்கோயிலில் பஞ்சப்பிரகார உற்சவமாக நடக்கிறது.
பஞ்சப்பிரகார விழாவில் மாறுவேடத்தில் சிவன், பார்வதி விமர்சையாக நடைபெற்ற விழா: இந்நாளில் இக்கோயிலில் உள்ள ஐந்து பிரகாரங்களையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வலம் வருவதால் இந்த உற்சவத்திற்கு பஞ்சப்பிரகாரம் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது. அதிலும் விபூதியைக்கூலியாகக் கொடுத்து சித்தரால் கட்டுவித்ததாகக் கூறப்படும் திருநீற்றான் மதிலை இந்த பஞ்சப்பிரகார நாளில் இக்கோயில் மூர்த்திகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வலம் வருவதால் இவ்விழா சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவ்விழாவில் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால், பாவங்கள் சாபங்கள் ஏதுமிருந்தால் அவை முற்றிலுமாக விலகும் என்பது ஐதீகம். இந்நிலையில், இவ்விழாவனாது இன்று (ஏப்ரல் 16) திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இதையும் படிங்க:வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்: கோவிந்தா.. கோவிந்தா என்று மனமுருகி முழங்கிய மக்கள்; சிலிர்த்துப்போன வெளிநாட்டவர்கள்!