திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி விழா டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பகல்பத்து வைபவத்தில் உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒரு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கிவருகிறார்.
முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் இந்த நிலையில் இன்று (டிச.23) ஸ்ரீரங்கம் பகல்பத்து ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியில் உற்சவர் நம்பெருமாள் முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பகல்பத்து, ராப்பத்து
மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக பத்து நாள்களும், பிறகு பத்து நாள்களும் என, பகல்பத்து, ராப்பத்து வைபவம் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பாக நடைபெறும்.
பகல்பத்து வைபவத்தில் உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில், ஒன்பதாம் நாளான இன்று (டிச.23) நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.
இன்றைய சிறப்பு அலங்காரம்
முத்துக்குறி அலங்காரத்துடன் புறப்பட்ட நம்பெருமாள், காலை 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார். அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நம்பெருமாளை தரிசனம் செய்தனர். இரவு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
முத்துக்குறி அலங்காரத்தில் நம்பெருமாள்
வைகுண்ட ஏகாதேசித் திருவிழாவை முன்னிட்டு மூலவர் ரங்கநாதப் பெருமாளுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு மிக்க இந்த அலங்காரத்தை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.
இதையும் படிங்க :நம் நாட்டில் இந்த நிலை என்று வரும்... பிரதமரிடம் ராகுல் கேள்வி!