திருச்சி :திருவெறும்பூர் பனையக்குறிச்சியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன் (30). இவர் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று திருச்சி போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் எண்கவுண்டர் குறித்து பேசுகையில், “கடந்த சில நாட்களாகவே துப்பாக்கி மற்றும் அரிவாளால் பன்றிகளைத் தாக்கி கடத்தி வருகின்றனர் என புகார்கள் வந்துள்ளது. மேலும், பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வருகிறார்கள் எனவும், ரவுடி கொம்பன் ஜெகன் அங்குள்ள சனமங்கலம் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.
இதை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் அவரைப் பிடிக்கச் சென்றார். அப்போது வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் வெடிகுண்டு வைத்து ரவுடி ஜெகன், காவல் உதவி ஆய்வாளரின் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். மேலும், இடது கையில் வெட்டி உள்ளார். இதனால் தற்காப்பிற்காக காவல் உதவி ஆய்வாளர் இரண்டு முறை சுட்டு உள்ளார்
பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக லால்குடி அரசு மருத்துவமனைக்கு, ரவுடி ஜெகனை கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மேலும், உடல்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். காயம் பட்ட உதவி காவல் ஆய்வாளர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
இது என்கவுண்டர் இல்லை, காவல்துறையின் தற்காப்பிற்காக, பாதுகாப்பிற்காக சுடப்பட்டது. சனமங்கலம் பகுதியில் வழிப்பறி நடைபெறுவதாக தகவல் வந்ததை அடுத்து, அங்கு சென்றபோது இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது. உடனே, ஜெகனை மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்ற பின்னர், ஆய்வாளர் சம்பவ இடத்தில் பார்த்தபோது நாட்டுத் துப்பாக்கி, பெட்ரோல் வெடிகுண்டு, சணல் வெடிகுண்டு இருப்பதைக் கண்டறிந்தனர்.