திருச்சி: கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தீரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.
அந்த அறிவிப்பின் படி, கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் ஆளும் பாஜக கட்சி காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்துவிட்டது. தற்போதைய தேர்தல் ஆணைய முடிவுகளின் படி, காங்கிரஸ் 81 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 113 இடங்களில் - பாஜக 46 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 18 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
மைசூர், மாண்டியா, சாம்ராஜ்நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில், உள்ள தொகுதிகள் பழைய மைசூரு பிராந்தியமாக கருதப்படுகிறது. இங்கு குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிதான் பொதுவாக அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கும். ஆனால், இந்த முறை காங்கிரஸ் பெரிய அளவில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 34 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 13 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. மேலும் தபால் வாக்குகள் சுற்று முடிந்து, வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால் முடிவுகள் இன்னும் மாற வாய்ப்புகள் உள்ளன.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வெற்றி முகம் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறுகையில், “கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் பெரும்பான்மை பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தேர்தல் வெற்றி என்பது முன்கூட்டியே எதிர் பார்த்த ஒன்று தான். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்ததால் கர்நாடகா மாநிலத்தில் மக்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியுடன் இல்லை என்பதை கடந்த கால நிகழ்வுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.