திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகேயுள்ள தோப்புப்பட்டியைச் சேர்ந்த ஜான்பீட்டர் - ஜான்ஸிமேரி தம்பதியினர் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு கவி சோஷியா (வயது 6) என்ற மகளும், எட்ரிக் எழில் (வயது 4) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி இத்தம்பதியினர் கட்டட வேலைக்காக திருச்சி சென்று விட்டனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த குழந்தைகள், தங்களது வீட்டின் மாடியில் உள்ள தடுப்புக்கட்டையின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது சிறுவன் எட்ரிக் எழில், எதிர்பாராத விதமாக மாடியின் தடுப்புக் கட்டையிலிருந்து தவறி விழுந்துள்ளான். இதனைக் கண்ட சிறுமி, வீட்டின் பின்புறம் உள்ள தடுப்புச் சுவற்றில் தொங்கிய நிலையில் அழுதுகொண்டிருந்த சிறுவனின் கையைப்பிடித்து காப்பாற்றும் முயற்சியில் நீண்ட நேரமாக போராடியபடி கூச்சலிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சிறுமியின் சத்தம் கேட்டு அவ்வழியாகச் சென்ற வியாபாரி முகமது சாலிக் என்பவர் ஓடி வந்து, சிறுவனின் கையை தாங்கிப் பிடித்திருந்த சிறுமியிடம் கையை விட்டுவிடும்படி கூறி, கீழே விழுந்த சிறுவனை லாவகமாக தாங்கிப் பிடித்து காப்பாற்றியுள்ளார்.
இச்சம்பவத்தை அவர்களது பின் வீட்டில் வசிக்கும் 13 வயது சிறுமி செல்போனில் எடுத்த காணொலிக் காட்சி, தற்போது வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தவறி விழுந்த தம்பியை தாங்கிப் பிடித்து காப்பாற்றிய சிறுமி மேலும், சிறுவனை லாவகமாகப் பிடித்து காப்பாற்றிய வியாபாரிக்கு நன்றி தெரிவித்தும், தனது தம்பி கீழே விழுந்துவிடாமல் வெகு நேரமாக தாங்கிப் பிடித்து உதவிக்காகக் கூச்சலிட்ட ஏழு வயது சிறுமியின் பாசப்போராட்டத்தையும் கண்டு பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க...மீண்டும் முழு பலத்துடன் செயல்படும் உச்ச நீதிமன்றம்!