தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்தாண்டில் இந்தியாவிலேயே தூய்மையான நகரமாக திருச்சி முதலிடம் பிடிக்கும்.. திருச்சி மேயர் உறுதி! - Trichy ranked cleanest city in TN

Trichy ranked as cleanest city in TN: மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA) நடத்திய ஸ்வச் சர்வக்சன் 2023-இன் படி, தமிழ்நாட்டின் தூய்மையான நகரமாக 'திருச்சி மாநகரம்' முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு இங்குள்ள மக்களின் ஒத்துழைப்பே காரணம் என திருச்சி மேயர் அன்பழகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 2:00 PM IST

தூய்மையான நகரத்திற்கான பட்டியலில் திருச்சி முதலிடம்

திருச்சி: திருச்சி, தமிழ்நாட்டின் தூய்மையான நகரமாக முதலிடம் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் 112வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், விரைவில் மக்களின் இதே ஒத்துழைப்போடு, இந்தியாவிலேயே தூய்மையான நகரமாக முதலிடம் பிடிப்போம் என திருச்சி மேயர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகளாக சாலை அமைத்தல், பாதாளச் சாக்கடை அமைத்தல், பூங்கா மரம் நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. தூய்மை நகரத்துக்கான விருது வழங்கும் விழா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் செயலர் மனோஜ் ஜோஷி, தமிழகத்தில் தூய்மை நகரத்தில் முதலிடம் பெற்றதற்கான 'திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு தூய்மை நகரத்துக்கான சான்றிதழ்' மற்றும் விருதை கடந்த ஜனவரி 11 அன்று வழங்கினார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்திலேயே 'தூய்மையான மாநகரம்' (Trichy is a cleanest city in TN) என திருச்சி மாநகராட்சிக்கு மத்திய அரசு முதலிடம் கொடுத்துள்ளது.

டெல்லியில் இதற்கான விருதை பெற்றுவிட்டு திரும்பிய மாநகராட்சி மேயர் அன்பழகன், இன்று (ஜன.13) செய்தியாளர்களிடம் பேசுகையில், 'திருச்சி மாவட்டம் மாநிலத்தின் மையப்பகுதியாக இருப்பதால், இதனை முன்னோடி மாநகரமாக உருவாக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

திருச்சி மாநகராட்சியைப் பொறுத்தவரை, போக்குவரத்து நெரிசல், குடிநீர் பிரச்னை இல்லாமலும், குப்பை இல்லாத மாநகராட்சியை உருவாக்கவும், பாதாளச் சாக்கடைகளில் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் மாநகராட்சி சார்பில் பெரும் முயற்சி எடுத்து இருக்கிறோம்.

கடந்த வருடம், திருச்சி மாநகராட்சியை முன்னோடி மாநகரமாக கொண்டு வந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சுதந்திர தினத்தன்று விருது பெற்று, ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியை, மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு மருத்துவச் செலவு மற்றும் கல்விச் செலவுக்காக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், இந்த ஆண்டும் ஸ்வச் பாரத் மிஷன் 2.0 திட்டத்தின் கீழ், 2023ஆம் ஆண்டுக்கான தூய்மையான நகரம் என்ற பட்டியலில் திருச்சி மாநகராட்சிக்கு முதலிடம் பெற்ற நிலையில், மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. இதை டெல்லி சென்று பெற்றுக் கொண்டு வந்தோம். இது எங்களுக்கு உந்துதல் சக்தியாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக் காலத்தில், திருச்சி மாநகராட்சியில் எதுவும் செயல்படுத்தவில்லை.

ஆனால், தற்போது முதலமைச்சர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஒப்புதலோடு நிதியைப் பெற்று, திருச்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். எனவே, அடுத்த வருடத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே சிறந்த மாநகரமாக திருச்சி மாநகரம் உருவாக முயற்சி எடுப்போம்' என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், 'திருச்சி மாநகராட்சியில் மக்களின் ஒத்துழைப்பு இருந்ததால்தான், டெல்லியில் சென்று தமிழகத்திலேயே தூய்மையான மாநகரமாக திருச்சி மாநகராட்சி பரிசு பெற்றுள்ளது. இதற்காக மாநகராட்சி மக்களும், துப்புரவுப் பணியாளர்களும், மாநகராட்சி ஊழியர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

திருச்சி மெட்ரோ ரயில் திட்டம்:மெட்ரோ ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை, DPR போடப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு, அதற்கான பணிகள் தொடங்கும். திருச்சி மாநகராட்சியுடன் 24 ஊராட்சிகள், 8 மாநகராட்சிகள் இணைய இருக்கின்றன. அப்படி இணையும்போது, விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சியாக மாறும்போது, மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும். பஞ்சப்பூர் பேருந்து நிலையம் முழுமையாக நிறைவடைந்த பிறகே திறக்கப்படும். இன்னும் மூன்று மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக' தெரிவித்தார்.

இதையும் படிங்க:பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இதுவரை 1.94 லட்சம் பேர் பயணம்!

ABOUT THE AUTHOR

...view details