திருச்சி கேகே நகர் அருகே ஓலையூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெற்றோர் ராம்பாய்-ரானோஜிராவ் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை ரஜினி ரசிகர் ஸ்டாலின் புஷ்பராஜ் என்பவர் கட்டியுள்ளார். இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்து, இன்று 48வது நாள் பூஜையும், கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயணன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு, ரசிகர் மன்ற நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். சாதுக்கள் பலர் கலந்து கொண்டு பூஜை செய்தனர்.
'ரஜினியின் அரசியல் தாமதம் நல்லதுதான்..!' - சகோதரர் சத்ய நாராயணா!
திருச்சி: "அரசியலுக்கு தாமதித்து ரஜினி வருவதும் நல்லதுதான். ஆனால் நிச்சயம் வருவார்" என்று, ரஜினியின் சகோதரர் சத்ய நாராயணா தெரிவித்துள்ளார்.
பின்னர் சத்ய நாராயணா செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களது பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மணிமண்டபம் நல்ல முறையிலும் அழகாகவும் அமைந்துள்ளது. 48 நாட்கள் பூஜை முடிந்து தற்போது கும்பாபிஷேகம் நடந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மணிமண்டபத்தை பார்வையிட ஷூட்டிங் முடிந்த பின்னர் ரஜினிகாந்த் நிச்சயம் வருவார். அவரது அரசியல் பிரவேசம் குறித்து நல்ல முடிவு வரும். இதுகுறித்து விரைவில் அவர் அறிவிப்பார். நல்லதே நடக்கும். அரசியலுக்கு பின்னர் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்ன என்பதை அவர் அறிவிப்பார். கண்டிப்பாக விசேஷமான திட்டங்கள் நிறைய இருக்கும். அரசியலுக்கு அவர் தாமதித்து வருவதும் நல்லது தான். ஆனால் நிச்சயம் வருவார்" என்றார்.