ரயில் நிலையத்திற்கு உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த வெள்ளி கொலுசுகள் பறிமுதல்
திருச்சி: ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 36 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (27). இவரது நண்பர் அரவிந்த். இருவரும் திருச்சியிலிருந்து புவனேஸ்வர் செல்வதற்காக ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடிக்க மதியம் 2 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் மொய்தீன் உத்தரவின்பேரில் ரயில்வே ஆய்வாளர் ஸ்ரீதரன் தலைமையில், ரயில் நிலையத்தில் ஸ்கேனர் மூலம் பயணிகளின் உடமைகளை சோதனைசெய்தனர்.
இதில் இருவரும் கொண்டு வந்த மூன்று பைகளை பரிசோதித்தபோது சந்தேகத்துக்குரிய பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பின் அந்தப் பைகளை ரயில்வே காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று உதவி ஆய்வாளர்கள் ராஜ்குமார், இசக்கி ராஜா ஆகியோர் சோதனைசெய்தனர்.
அதில் 57 கிலோ 372 கிராம் எடையுள்ள, சுமார் ரூ.36 லட்சம் மதிப்பிலான வெள்ளி கொலுசுகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து வணிகவரித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வணிகவரி துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பொருள்களுக்கான அபராதத் தொகையாக சக்திவேல், அரவிந்தன் ஆகியோரிடம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 480 வசூலித்தனர். அதன் பின்னர் வெள்ளி கொலுசுகள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்தனர்.