திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா, திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றார். அதிலிருந்து, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபடும் சட்ட விரோத நடத்தைக்காரர்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் சமூக விரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார். அதன்படி, திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 6 ஆயிரத்து 251 நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம், சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள், குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் ஆகியோரை கண்டறிந்து கடந்த ஆறு மாதங்களில் 15 சரித்திர பதிவேடு ரவுடிகள் உள்பட 61 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு, பள்ளி கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா மற்றும் போதை மருந்துகளை விற்பனை செய்த 94 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்தும், அதில் 4 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 29 நபர்களுக்கு சரித்திர பதிவேடுகள் ஆரம்பிக்கப்பட்டு அவர்களது செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.