திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நடவடிக்கையில் மாநகர காவல் ஆணையர்! திருச்சி: திருச்சியில் கடந்த மாதம் 29 ஆம் தேதி அரிஸ்டோ பாலம் திறக்கப்பட்டது. அந்த பாலமானது மன்னார்புரம், திண்டுக்கல் சாலை, ஜங்சன், கிராப்பட்டி, மத்திய பேருந்து நிலையம் சென்னை மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பாலத்தில் வாகனங்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஒரு வழி பாதையாக தான் இருக்கிறது. இந்த நிலையில் அந்த பாலத்தில் இரண்டு வழித்தடங்களில் மட்டும் இரு வழி பாதையாக மாற்ற ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரு வழி பாதைக்கான சோதனை முன்னோட்டம் இன்று கையில் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் காவல் துறை ஆணையர் அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா, "போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த பாலத்தின் இரண்டு வழித்தடங்களை மட்டும் இருவழிப் பாதையாக மாற்றுவதற்கு ஆய்வு செய்து வருகிறோம். இன்னும் சில நாளில் இது இருவழிப்பாதையாக மாற்றப்படும். சிறிய ரக வாகனங்கள் மட்டும் இருவழிப் பாதையில் செல்ல அனுமதிக்கப்படும். திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "திருச்சி மாநகரில் 1,500 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, அந்த கேமராக்கள் அனைத்தும் சரியாக இயங்குகிறதா என தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தினந்தோறும் அதனை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனக் கூறினார்.
மேலும், "திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் தொடர்புடைய 29 குற்றவாளிகளின் சரித்திர பதிவேடு திறக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இது தவிர கஞ்சா எங்கிருந்து வருகிறது எப்படி விற்பனை செய்யப்படுகிறது என பல்வேறு கோணங்களில் விசாரித்து, குறிப்பிட்ட இடங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அந்த இடங்களில் தீவிர கண்காணிப்பானது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்" தெரிவித்தார்.
பின்னர், போதைப்பொருள் குறித்து தொடர்ச்சியாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அவர், குறிப்பாக கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார்.
இதையும் படிங்கள்: பெரம்பலூர் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஆவணங்களை எரித்து, சிலைகள் உடைப்பு - பின்னணி என்ன?