திருச்சி: சந்துக்கடை பகுதியில் சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் ஜோசப் (43). இவர் கடந்த 15 வருடங்களாக தனது வீட்டிலேயே நகைப் பட்டறை வைத்து, ஆர்டரின் பேரில் மூக்குத்தி செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோசப் கடந்த ஒரு மாதமாக சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் நகை வேலையை முடித்துவிட்டு, வேதாத்திரி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
வழக்கம் போல ஏப்ரல் 25-ஆம் தேதி, அவரும் அவரது மனைவி ஏஞ்சல் மேரியும் நகை வேலை முடித்து விட்டு இரவு சுமார் 10 மணியளவில் வேதாத்திரி நகரில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஏப்ரல் 26-ஆம் தேதி காலை சுமார் 6 மணியளவில், ஜீவா என்பவர் ஜோசப்க்கு போன் செய்து அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன்பேரில், ஜோசப் அவரது மனைவியுடன் சௌந்தர பாண்டியன் தெருவில் உள்ள வீட்டிற்கு வந்த பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாகவும், வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் ஆர்டரின் பேரில் மூக்கத்தி செய்வதற்காக தங்கத்தை கம்பியாக உருக்கி வைத்திருந்த தங்கம், கல் வைத்த மூக்குத்திகள், பூ மூக்குத்திகள், கல் வைக்காத மூக்குத்திகள், மூக்குத்திகளின் திருகாணிகள், நகை செய்யும் போது சேதாரமாகும் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த தோடு ஆகிய நகைகள் திருடப்பட்டு இருந்ததாக தெரிவித்துள்ளார்.
திருடுபோன நகைகளின் மொத்த எடை சுமார் 1 கிலோ இருக்கும் என்றும், அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என்றும் தனது புகாரின் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் ஏப்ரல் 26-ஆம் தேதி காலை 08.30 மணிக்கு கோட்டை (குற்றபிரிவு) காவல் நிலையத்தில் வழக்குப்ப்திவு செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு திருடியவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டது.