சூடுபிடிக்கும் திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு திருச்சி: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள், தை 2ஆம் தேதி அன்று, மாட்டுப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பசாமி கோயிலில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இன்று (ஜன.16) நடைபெற்று வரும் போட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 750 ஜல்லிக்கட்டு காளைகளும், 550 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.
இப்போட்டி, காலை 7.45 மணி அளவில் துவங்கியது. இந்த போட்டிகளில், முதலாவதாக ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோயில் மாடு முதலில் அவிழ்த்து விடப்பட்ட பிறகு, அடுத்தடுத்து போட்டியில் பங்கேற்கும் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மேலும், போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் டிவி, மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இதில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும், சிறந்த காளைக்கும் முதல் பரிசாக இருசக்கர வாகனமும், இரண்டாவது பரிசாக வீட்டுமனையும் வழங்கப்படுகிறது. முன்னதாக கால்நடை இணை இயக்குநர் மும்மூர்த்தியை தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளை மருத்துவ சோதனை செய்தனர்.
இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆக்ரோஷமாக களமிறங்கும் காளைகள்.. திணறும் மாடுபிடி வீரர்கள்!
அதேபோல், திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி தலைமையிலான மருத்துவ குழுவினர், ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் போதைப் பொருட்கள் உட்கொண்டு உள்ளார்களா என்பதை பரிசோதனை செய்தனர். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியிடும் போது காயம் அடையும் வீரர்கள், உரிமையாளர், காவல் துறையினர், என அனைவருக்கும் முதல் கட்ட சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணிகளுக்காக திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் சுமார் 600 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த போட்டியை காண, சூரியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தந்தனர்.
அவர்கள், போட்டிகளை கண்டு களிக்கும் வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும், போட்டியை காணவரும் பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்தவும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு, திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாலமேடு ஜல்லிக்கட்டு: திமிறும் காளைகளின் திமிலைப் பிடிக்க போட்டியிடும் காளையர்கள்..!