சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. குறிப்பாக அனைத்து ஒன்றியக்குழு தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது.
அப்போது முதல் ஊராட்சி ஒன்றியங்களின் அதிகாரத்தை மாவட்ட நிர்வாகம் பறித்துவிட்டதாக புகார் எழுந்தது. அந்த வகையில் திருச்சி மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் துரைராஜ் தலைமையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சுவராஜை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.
அதில், 'திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த அனைத்து திட்ட பணிகள் தொடர்பான ஒப்பந்தப்புள்ளிகளின் அறிவிப்புகள் ஊராட்சி ஒன்றியங்களில் வெளியிடப்படுவது கிடையாது. இதற்கு பதிலாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்தப்புள்ளிகள் நடைபெறுகிறது. இதுகுறித்து ஒன்றியக்குழு தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் நடைபெறுவது ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரின் அதிகாரத்தை பறிப்பதுபோல் உள்ளது.
ஊராட்சி ஒன்றியங்கள் சார்ந்த அனைத்து திட்டம் தொடர்பான ஒப்பந்தபுள்ளிகள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் மட்டுமே நடைபெற வேண்டும். மேலும் சிறு, சிறு மராமத்து பணிகளின் ஒப்பந்தப்புள்ளிகள் கூட மாவட்ட வளர்ச்சி முகமையில் நடைபெறுகிறது. இது மிகவும் வேதனைக்குரியது. எனவே மாவட்ட ஆட்சியர் இந்த கோரிக்கை மீது சிறப்பு கவனம் செலுத்தி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'உதயநிதி இ-பாஸ் விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது’ - கே.என்.நேரு