திருச்சிமாவட்டம் மேலப்புதூர் பகுதியில் வசித்து வருபவர் மு. அன்பழகன். தனது சிறு வயதிலிருந்தே அரசியல் ஆர்வம் மிகுந்து இருந்ததால் திமுகவில் இணைந்தார். அன்பில் பொய்யாமொழியிடம் பாலபாடம் கற்றவர் 1999ஆம் ஆண்டு அவரின் மறைவிற்குப்பின் நேருவிடம் ஒட்டிக்கொண்டார். அவருக்கு வயது 66, நேருவின் விசுவாசியான அன்பழகன்,இருமுறை துணைமேயர் இருக்கையை அலங்கரித்தார்.
சிறையில் இருந்து வெற்றிவாகை சூடியவர்!
2011ஆம் ஆண்டு தேர்தலின்போது, அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையிலிருந்தபடி பழைய 32-வது வார்டில் போட்டியிட்டு, பிரச்சாரத்துக்கே போகாமல் வெற்றி பெற்றவர், திருச்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டதிலிருந்து தொடர்ந்து 5 தேர்தல்களிலும் திமுக வேட்பாளராக மு.அன்பழகன் போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 2016ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சியில் அதிமுக வேட்பாளர் ப. குமாரிடம் தோல்வியை தழுவினார்.
தேர்தல் பரப்புரையில் திருச்சி தென்னூரில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை முதலமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும். முன்னாள் துணை மேயர் அன்பழகனுக்கு மேயர் பதவி வேண்டும் என முதலமைச்சரிடம் கேட்கும் இடத்தில் நான் உள்ளேன். எனவே, அன்பழகன் மேயராக வாய்ப்புள்ளது'' என்று பேசி அன்பழகனுக்கு நம்பிக்கை அளித்தார். அதன்படியே திமுக வேட்பாளர் அன்பழகன் மீண்டும் 27வது வார்டில் போட்டியிட்டு 5 ஆயிரத்து 430 வாக்குகளும் பெற்றதோடு அதிமுக வேட்பாளர் உட்பட தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கவைத்து வெற்றி பெற்றார்.