திருச்சி:நீட் தேர்வைத் திணிக்கும் மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜங்ஷன் காதி கிராஃப்ட் பகுதியில் திருச்சியின் தெற்கு, வடக்கு மற்றும் மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம் காலை முதல் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் முடிவில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று உரை ஆற்றினார்கள்.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது: தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விளக்கு அளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து திமுக அரசு பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும் அல்லாமல் அமைச்சர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து மனுக்களும் கொடுக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஆளுநர் நீட் தேர்வு ரத்து செய்யும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பிலே போட்டுவிட்டார்.
தமிழக ஆளுநர் ஆளுங்கட்சிக்கு எதிராகவும் எதிர்க்கட்சிக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் அதற்கும் அஞ்சாமல் தமிழக மக்களுக்காக நமது முதலமைச்சர் போராடி வருகிறார். மத்தியில் திமுக இணைந்துள்ள 'இந்தியா' கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினால் தமிழ்நாட்டில் நிச்சயமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அவர் பேசினார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும் போது: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் படி தமிழ்நாடு முழுவதும் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பாக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வால் தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா மரணம் அனைவரையும் உருக்குலையச் செய்தது.