திருச்சி:தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் செல்வராஜன் தலைமையில் மையத்தின் 30 வது நிறுவன தினம் மற்றும் விவசாயிகள் தின விழா நேற்று (21.08.2023) கொண்டாடப்பட்டது. இதில் சிறந்த வாழை விவசாயிகள், தொழில் முனைவோர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
கற்பகவிருட்சகமாக கருதப்படும் வாழை சாகுபடியை ஊக்குவிக்கவும், புதிய யுக்திகள் மற்றும் விவசாயிகளுக்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வரும் திருச்சிராப்பள்ளி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 30 வது நிறுவன தினம் மற்றும் விவசாயிகள் தின விழா நேற்று நடைபெற்றது.
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் செல்வராஜன் தலைமையில் இந்த விழா கொண்டாடப்பட்டது. இந்த விவசாயிகள் தின விழாவில் 12 அரங்குகள் அமைக்கப்பட்டு கண்காட்சி நடத்தப்பட்டது.
இந்த கண்காட்சியில் வாழையின் புதிய பரிணாமங்கள், வாழையின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், உரங்கள், அதிக பயன்பெறும் முறைகள், ஏற்றுமதிக்கான வழிமுறைகள், பூச்சித்தாக்குதல்களிலிருந்து காத்தல் உள்ளிட்டவைகளை விளக்கும் வகையில் கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது.
இதையும் படிங்க: நடிகர்கள் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் மீது கிராம மக்கள் புகார்! இடையூறு செய்வதாக குற்றச்சாட்டு!
அதே போன்று பல்வேறு வாழை ரகங்களின் கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. தொடர்ந்து இந்த கண்காட்சி மற்றும் வாழை விவசாய கருத்தரங்கில் ஏராளமான வாழை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு தகவல்களை பெற்றதுடன், கண்காட்சியில் ஆலோசனைகளையும் கேட்டு பெற்றனர்.
மேலும் தேசிய உணவு தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பழனிமுத்து, பெங்களூர் வேளாண் ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்று சிறந்த வாழை விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், தொழில் முனைவோர்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். மேலும் வாழை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பான கையேடுகளையும் வெளியிட்டனர்.
இந்த தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் 372 வாழை ரகங்களும், 120 வெளிநாட்டு வாழை ரகங்கங்களும் இங்கு வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும் வாடல், நோய் தாக்காத வாழை ரகங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வாயிலாக எடுத்துரைத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப 15 ரக வாழைகள் பயிரிடலாம் என்றும், வாழையில் ஏற்படும் நோய் தாக்கங்கள் குறித்த சந்தேகங்களுக்கு வேலன் ஆராய்ச்சி மையத்தை அணுகினால் சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இது மட்டுமின்றி புதிய தொழில்நுட்பமாக ட்ரோன் பயன்படுத்தி இடுபொருட்கள் பயன்படுத்துவது குறித்தும் இங்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருவதாகவும் வாழை ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை அளிப்பது அவசியம்" - மதுரை உயர்நீதிமன்றம் கருத்து!