தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திருச்சி எம்எல்ஏக்கள் ஒற்றுமையாக உள்ளோம்; வதந்திகளை நம்பாதீர்" - அமைச்சர் கே.என்.நேரு! - காலை உணவுத் திட்டம்

Minister K N Nehru speech about integrity in the party: திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா கடிதம் கொடுத்ததாக பரவிய செய்தி வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் கே என் நேரு கூறினார்

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 4:44 PM IST

அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி: பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து கட்டுமானப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே என் நேரு, “புதிய பேருந்து நிலைய பணிகள் டிசம்பருக்குள் முடிவடையும் என அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் தெரிவித்துள்ளார்கள். ஆனால் மழைக் காலம் வர உள்ளதால் அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்குள் பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும் என்கிற முனைப்பில் பணிகள் நடைபெறுகிறது.

ஜீயபுரம் வரை பைபாஸ் சாலை அமைப்பதற்கு இன்னும் ஒன்றரை மாதத்தில் ஒப்பந்தம் கோரப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வருமா என்பது தெரியாது. ஆனால் பேருந்து நிலைய பணிகளை விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும். இந்த பேருந்து நிலையங்கள் அப்புறப்படுத்தப்படாமல் வணிக வளாகங்கள் அமைக்கப்படும். மாநகராட்சிக்கு வருவாய் வருவதற்கு என்ன தேவையோ அதனை செய்வோம்.

பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடத்தில் 520 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் மாநகராட்சிக்கு 100 ஏக்கரும், 10 ஏக்கர் ஐ.டி பார்க் அமைக்கவும், 30 ஏக்கர் விளையாட்டு திடலுக்கும், காவல் நிலையத்திற்கு ஒன்றரை ஏக்கரும், மின்சார துறைக்கு இரண்டரை ஏக்கர், தீயணைப்பு துறைக்கு ஒன்றரை ஏக்கர் ஒதுக்கப்பட உள்ளது. 300 ஏக்கர் வரை கையிருப்பில் உள்ளது. அதனை வருங்காலத்தில் தேவைப்படும் போது அதை பயன்படுத்துவோம்.

திருச்சி மற்றும் சேலத்தில் மெட்ரோ அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நிறைவடைந்து விட்டது. விரைவில் அங்கு மெட்ரோ கொண்டு வரப்படும். திருச்சி மாநகராட்சி பகுதிகளில் விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ள ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி விரிவுப்படுத்தப்படும் போது அந்த பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும்.

காலை உணவுத் திட்டம் தொடங்கிய போது ஒரு லட்சம் மாணவர்களுக்கு அது வழங்கப்பட்டது. அது தற்போது விரிவுப்படுத்தப்பட்டு இன்று 11 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் அதை தொடங்கி உள்ளார். நிதி நிலைமைக்கு ஏற்ப அது மேலும் விரிவுப்படுத்த முதலமைச்சர் ஆலோசித்து முடிவெடுப்பார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா கடிதம் கொடுத்ததாக பரவிய செய்தி வதந்தி என்றார். இந்த ஆய்வின் போது திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: "அருகில் இடம் இருக்க வெகு தூரத்தில் எதற்கு?" - திருச்சி மகப்பேறு மருத்துவமனை வழக்கில் அரசுக்கு அவகாசம்!

ABOUT THE AUTHOR

...view details