திருச்சி:ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, ரெங்கவிலாஷ் மண்டபம் அருகில், மாநகர காவல்துறை சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயில், வைகுண்ட ஏகாதசி விழா இன்று (டிச.12) திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது டிச.12 முதல் 22 வரை பகல் பத்து திருவிழாவாகவும், 23 முதல் ஜனவரி 2 வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. டிசம்பர் 23ஆம் தேதியன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்படுகிறது.
இது குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் கூறுகையில், “கடந்த வருடம் சுமார் 2 லட்சம் பக்தர்கள், வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு வருகை புரிந்தனர். இந்த வருடம் சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு வரும் மக்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளுர் மற்றும் வெளியூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சுமார் 2,500 பேர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளனர்.
மேலும், பகல் பத்து மற்றும் இராப்பத்தின்போது திருச்சி மாநகர காவல்துறையினர் மட்டும் 380 பேர் 2 சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு, பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதுடன், போக்குவரத்து காவலர்கள் அதிக அளவில் பணி நியமிக்கப்பட்டு, போக்குவரத்தை சீராக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் நான்கு சக்கர வாகனங்களை சித்திரை வீதி மற்றும் உத்திர வீதியில் நிறுத்த அனுமதியில்லை. பக்தர்களுக்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது.