தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலுவிற்கு கரோனா உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இந்த வகையில் திருச்சியிலும் அதன் தாக்கம் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டிருக்கிறது.
திருச்சியில் பிரதானமாக விளங்கும் காந்தி மார்க்கெட்டைத் திறக்க வேண்டும் என்று வியாபார சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலுவுடன் சேர்ந்து, அதன் நிர்வாகிகள் கடைகளைத் திறக்க வேண்டும் என்று தீவிரமாகப் போராடி வந்தனர்.
சென்னையில் கோயம்பேடு சந்தையில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதனால் திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். அதோடு பல கட்ட பேச்சு வார்த்தைகளிலும் மறுப்பை ஆட்சியர் வலியுறுத்தி வந்தார். சில தினங்களுக்கு முன்பு, திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் காந்தி மார்க்கெட் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோவிந்தராஜுலு உள்ளிட்ட இதர சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.