தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் இன்றுமுதல் செயல்பாட்டுக்கு வந்த கள்ளிக்குடி வேளாண் வணிக வளாகம் - திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: காந்தி சந்தைக்கு மாற்றாக திருச்சியில் கட்டப்பட்ட கள்ளிக்குடி வேளாண் வணிக வளாகம் இன்று (செப்.14) முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

trichy kallikudi market inaguration
trichy kallikudi market inaguration

By

Published : Sep 14, 2020, 6:08 PM IST

ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட திருச்சி காந்தி சந்தைக்கு மாற்றாக திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே கள்ளிக்குடி கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றிபெற்று முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது இந்தத் திட்டத்தை செயல்படுத்தினார்.

இடநெருக்கடி, போக்குவரத்து நெரிசல், சுகாதார சீர்கேடு ஆகியவற்றில் சிக்கித் தவிக்கும் திருச்சி காந்தி சந்தைக்கு மாற்றாக இது அமைக்கப்பட்டது. 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இந்த வணிக வளாகத்திற்கு செல்ல காந்தி சந்தை வியாபாரிகள் தற்போது வரை மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வணிக வளாகம் பூட்டப்பட்டு கிடந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும் மனிதவள சங்க அமைப்பாளருமான கு.ப. கிருஷ்ணன் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது திருச்சி காந்தி சந்தையைத் திறக்க இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே காந்தி சந்தை கரோனா தடுப்பு நடவடிக்கையாக பூட்டப்பட்டு, தற்காலிகமாக சந்தைகளாக பல இடங்களில் திருச்சியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கள்ளிக்குடி சந்தை இன்று (செப்.14) முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சுமார் 200 கடைகள் இன்று (செப்.14) திறக்கப்பட்டுள்ளது. இவற்றை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் உள்ளிட்டோர் திறந்துவைத்தனர்.

இதன்பின்னர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளரிடம் கூறுகையில், "காந்தி சந்தைக்கு மாற்றாக கள்ளிக்குடி சந்தையை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கினார். இங்கு காய்கறி, பழங்கள், பூ ஆகியவை விற்பனை செய்வதற்கும், குளிர்பதன கிடங்கு உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளது.

இது சிறு வணிகர்களுக்கான சந்தை கிடையாது. பெரு வணிகர்கள், கமிஷன் மண்டி வியாபாரிகள் ஆகியோருக்காக அமைக்கப்பட்டது. அதனால் கள்ளிக்குடி சந்தை செயல்பாட்டுக்கு முழு அளவில் கொண்டுவர வேண்டும். வியாபாரிகள் இங்கே வந்து கடையை நடத்த வேண்டும்.

இன்று ஒரேநாளில் மட்டும் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காய்கறி, பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தச் சந்தை முழுமையாகச் செயல்பட வேண்டுமென்றால் திருச்சி மாநகரில் அனுமதியின்றி செயல்படும் 8 தரகு கமிஷன் மண்டிகளை மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் இணைந்து தடுத்து நிறுத்த வேண்டும்.

அந்த தரகுமண்டிகளை மூடினால்தான் கள்ளிக்குடி சந்தை முழுமையாகச் செயல்படும். காந்தி மார்க்கெட்டிற்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறி, பழங்களை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களை கள்ளிக்குடி வேளாண் வணிக வளாகத்திற்கு திருப்பிவிட வேண்டும்.

இந்த புதிய வேளாண் வணிக வளாகத்தில் விவசாயிகளும் தற்போது வியாபாரிகளாக மாறி தங்களது விளை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இதேபோல் திருச்சி மாநகரில் 4 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் பயன்பாட்டுக்கு வராத நிலையில் உள்ளது. ஆகையால் அலுவலர்கள் இவற்றை உரிய நடவடிக்கை எடுத்து செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details