மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய மண்டல பொதுக்குழுக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்த்தித்து பேசிய அவர், ”நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முழுக்க முழுக்க பெரும் முதலாளிகளுக்கு ஆதரவான பட்ஜெட்டை தாக்கல் செய்து இருக்கிறார். இந்தியாவை மொத்தமாக பெரும் கோடீஸ்வரர்களுக்கு விற்பனை செய்யும் வகையில் தான் இந்த பட்ஜெட் அமைந்து இருக்கிறது.
நரேந்திர மோடியின் ஆட்சி மாநில உரிமைகளை பறிக்க கூடிய ஆட்சியாக தான் உள்ளது. செஸ் வரியை விதித்து இருக்கிறார்கள். இதனால் மாநில அரசுக்கு வரும் நிதி குறையும். எட்டு வழிச்சாலைக்கு கடுமையான எதிர்ப்பு தமிழ்நாட்டில் உள்ளது. ஆனால் இதை நிறைவேற்றியே தீருவோம் எனக் கூறி உள்ளார்கள்” எனக் கூறினார்.
கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். டெல்லியில் விவசாயிகள் பேரணியில் நடைபெற்ற வன்முறைக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகவேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்த இருவர் கைது