காவிரி ஆற்றை பாதுகாக்கும் வகையில் "காவேரி கூக்குரல்" என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடந்த ஜூலை முதல் நடத்திவருகிறார். அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நடவேண்டும். இதற்காக ஒரு மரக்கன்றுக்கு ரூ. 42 செலவாகிறது. இந்த தொகையை கொடுத்து, விவசாயிகள் அதன் மூலம் மரம் வளர்க்க வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் இந்த இயக்கத்தை நடத்தி வருகிறார். இதையொட்டி அவரே மோட்டார் சைக்கிளை ஓட்டி தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்தி வருகிறார். இந்த மோட்டார் சைக்கிள், கார்கள் அடங்கிய பேரணி நேற்று ஈரோட்டில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று திருச்சிக்கு இந்த பேரணி வந்தடைந்தது.
அதனை தொடர்ந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் நேரு, சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தண்ணீரை மழை மூலமே எதிர்பார்க்க வேண்டும் பின்னர் இந்த நிகழ்ச்சியில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசுகையில், "100 முதல் 140 நாட்கள்வரை பெய்து வந்த மழை தற்போது 40 முதல் 75 நாட்கள் மட்டுமே பெய்கிறது. இதிலும் 50 விழுக்காடு கடலில் சென்று கலந்துவிடுகிறது என்று அனைவரும் வருத்தப்படுகின்றனர். ஆனால் இவை கட்டாயம் கடலில் கலந்தாக வேண்டும். இல்லை என்றால் கடல் நீர் ஊருக்குள் புகுந்து விடும். தற்போது தமிழ்நாட்டில் கடல் நீர் 60 கி.மீ வரை உள்புகுந்துள்ளது.
காவிரி என்பது ஒரு பிரச்னையாகவே கருதப்படுகிறது. ஆனால் காவிரி என்பது 'காவேரி தாய்' என்பதை நாம் உணர வேண்டும். தற்போது காவிரி நதியில் 44 விழுக்காடு தண்ணீர் குறைந்துவிட்டது என்று அறிவியல் பூர்வமாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே 70 விழுக்காடு காவிரி அழிந்து போய்விட்டது. இது அழிவுக்கான அடையாளமாகும். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்த 30 ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது காவிரி என்பதே இல்லாமல் போய்விடும். தண்ணீரை மழை மூலம் மட்டுமே எதிர்பார்க்க வேண்டும். இதற்கு தேவையான மரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்" என்றார்.