திருச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் சிறு குறு, நுண் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் முகாம் கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வங்கியின் மேலாண்மை இயக்குநர் கர்ணம் சேகர், நிர்வாக இயக்குநர் அஜய்குமார் ஸ்ரீவத்சவா, துணை பொது மேலாளர் சதானந்தமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக வங்கியின் மேலாண்மை இயக்குநர் கர்ணம் சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இதுவரை 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை சிறு குறு, நுண் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதை 50 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயம்செய்யப்பட்டு அதற்கேற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக சிறு, குறு, நுண்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை நேரடியாக சந்திக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவை? என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று திருச்சியில் 250 வாடிக்கையாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு 30 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது.