திருச்சி: தமிழகத்தின் தென் திருப்பதி என்று அழைக்கப்படுவதும், குணசீல மகரிஷியின் தவத்தினையடுத்து பிரசன்ன வெங்கடேசனாக காட்சியளித்த கோயிலானதாக கருதப்படுவதால், குணசீலம் பிரன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இந்த கோயிலுக்கு அழைத்துச் சென்று, 48 நாட்கள் கோயில் வளாகத்தில் தங்க வைத்தால், 48 நாட்கள் முடிவில் அவர்களின் வியாதி குணப்படுத்தப்படுவதாக பொதுமக்கள் நம்புகின்றனர். மேலும், பிரசித்தி பெற்ற மகரிஷிக்கு காட்சியளித்த தினமான புரட்டாசி மாதம், திருவோணம் நட்சத்திரத்தைக் கொண்டு இந்தக் கோயிலில் பிரம்மோற்சவம் 11 தினங்கள் கொண்டாடப்படும்.
அதன்படி, 18-ஆம் தேதி பிரம்மோற்சவமானது கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனுமந்த வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம், வெள்ளிக்கருட வாகனத்தில் உபய நாச்சியார்களுடன் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று (செப்.26) வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான தேரில் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் ஸ்ரீனிவாசப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.