புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் 100 சதவீதம் நோயிலிருந்து விடுபடலாம் திருச்சி: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர் நேரு உறுதிமொழி வாசித்து, வண்ண பலூன்களை பறக்கவிட்டு பேரணியைத் தொடங்கி வைத்தார்.
மேலும் இப்பேரணியில் மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள் என 300-க்கும் மேற்பட்டோர் புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கல்லூரி முதல்வர் நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், '' "க்ளோஸ் த கேப்" என்ற தலைப்பின் கீழ் இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு தடையாக உள்ள இடைவெளிகளை கலைந்து முழுமை அடைய செய்வதற்காக இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர்.
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் 100% புற்றுநோயிலிருந்து விடுபடலாம். புற்றுநோய் குறித்த அறிகுறிகளை பொதுவாக யாரும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாததால் புற்றுநோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்காக வருகின்றனர். குறிப்பாக, கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய சிறிய அளவிலான மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இந்த புற்றுநோய் குறித்த அறிகுறிகளுக்கான அடிப்படை தகவல்களை தெரிந்து வைத்திருந்தால் புற்றுநோயைத் தடுக்க ஒரு சிறந்த வழியாக அமையும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மகா ருத்ர யாகம்!