சீனாவில் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானப் பயணிகளும் தீவிர சோதனைக்குப் பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து நேற்று அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்த இளைஞர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது வைரஸ் தொற்று இருப்பதாகச் சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருச்சி மகாத்மா காந்தி பல்நோக்கு மருத்துவமனை முதல்வர் சாரதா செய்தியாளர்களிடம் கூறுகையில், ”மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி மணல்மேடு பகுதியைச் சேர்ந்த அருண் (27) என்பவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு டிரைவர் பணிக்காகச் சென்றார். இன்னும் சில தினங்களில் அவரது தங்கையின் திருமணம் நடைபெற உள்ளது.
இதற்காக அருண் சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தார். திருச்சியிலிருந்து கார் மூலம் அவர் மதுரை செல்ல திட்டமிட்டிருந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் அருணை அங்கிருந்த மருத்துவக் குழுவினர் சோதனையிட்டபோது அவருக்கு காய்ச்சல் மற்றும் சளிப் பிரச்னை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.