Tomato price hike: திருச்சியிலும் சதம் அடித்த தக்காளி விலை! திருச்சி: நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளி விளையும் பகுதிகளில் நிலவும் வெப்பம் மற்றும் கன மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை விளைச்சல் குறைந்ததாலும், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கும் விற்கப்பட்டு வருகிறது. சமையலில் தவிர்க்க முடியாத தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் வழக்கமாக வாங்குவதைவிடக் குறைந்த அளவே தக்காளியை வாங்கிச் செல்கின்றனர்.
தக்காளி விலை உயர்வால் பெரும்பாலான மக்கள் தக்காளியைச் சமையலில் குறைக்கத் தொடங்கி உள்ளனர். தக்காளி இல்லாமல் செய்யக்கூடிய உணவு வகைகளைச் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதேசமயம், தக்காளிக்கு மாற்றாகப் புளி மற்றும் எலுமிச்சையைச் சமையலில் பயன்படுத்தவும் தொடங்கி உள்ளனர். குறிப்பாகச் சாம்பாரில் தக்காளிக்குப் பதில், புளிப்புச் சுவைக்காகப் புளி அல்லது மாங்காய் சேர்க்கின்றனர். மாங்காய் சேர்ப்பதால் சுவை தனித்துவமாக இருப்பதால் பலரும் இதையே விரும்புகின்றனர்.
தக்காளி விலை உயர்வு குறித்து திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்றச் சங்கம் மற்றும் தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணை செயலாளர் கமலக்கண்ணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், "கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் தக்காளியின் விலை கடுமையாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பழனி, உடுமலைப் பேட்டை, திருச்சி மணப்பாறை பகுதியில் நாட்டுத் தக்காளி விளைந்து இருந்தது. ஆனால் மக்கள் அது போன்ற தக்காளியை விரும்புவதில்லை. அதனால் விவசாயிகள் நாட்டுத் தக்காளியை விளைச்சல் செய்வதை விட்டுவிட்டனர். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று தக்காளி இறக்குமதி செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றம் காரணமாகத் தக்காளி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. திருச்சி மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் தக்காளி விலை கடுமையாக விலை உயர்வு அடைந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தங்கம் மற்றும் டாஸ்மாக் கடைக்கு விலை நிர்ணயம் செய்வது போல் தக்காளி மற்றும் தக்காளி விவசாயிகளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொண்டால் வருங்காலத்தில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படாது.
பசுமைக் காய்கறிகள் நியாய விலைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.50 க்கு விற்பனை செய்யப்படுவது போன்று, விவசாயிகளுக்கும் ஒரு தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மளிகைப் பொருட்கள் விலை உயர்வு - காரணம் இதுதானாம்!