திருச்சி:தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய உள்ளனர். இதன் காரணமாக, மக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ரயில்களில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் மற்றும் பட்டாசுப் பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்று (நவ.10) காலை 6 மணிக்கு புறப்பட்ட 'வந்தே பாரத்' அதிவேக விரைவு ரயில் (vande bharat express chennai to tirunelveli) காலை 9.40 மணிக்கு திருச்சி ஜங்ஷன் முதல் நடைமேடையை வந்தடைந்தது.
அப்போது, இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், வணிக கோட்ட மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள், ரயில் பயணத்தின் போது பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், 'ரயில் பயணத்தின் போது கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் அடுப்பு, தீப்பெட்டி, பட்டாசுகள் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக் கூடியப் பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது' என அறிவுறுத்தினர்.