திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா ஆலய திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டை மணப்பாறை வட்டாட்சியர் தமிழ் கனி கொடியசைத்து தொடங்கிவைத்தார். கோவில் காளையைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 650 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் கட்டவிழ்த்து விடப்பட்டன.
ஜல்லிக்கட்டில் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். போட்டியில் வீரர்களிடம் அடங்கமறுத்து வெற்றிபெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கும், வாடிவாசலில் சீறிபாய்ந்து காளையை அடக்கிய காளையர்களுக்கும் சைக்கிள், கட்டில், பீரோ, மிக்சி, மின்விசிறி, அண்டா, சேர், குக்கர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் சிறந்த மாடு, சிறந்த மாடுபிடி வீரருக்கு சிறப்புப் பரிசாக 2 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.